செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

உன் சமையலறையில் -திரை விமர்சனம்


எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய தெலுங்கு நாவலை மையப்படுத்தி மலையாளத்தில், ஆஷிக் அபு இயக்கத்தில் 2011-ல்  வெற்றி படமாய் வெளிவந்த ''சால்ட் அண்ட் பெப்பர்'' திரைப்படத்தின் மறுஆக்கமாக வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ‘’உன் சமையலறையில்’’



‘’உன் சமையலறையில்’’ திரைப்படத்தில்  தமிழர்களின் உணவு சுவையுணர்வை மையப்படுத்தி அதன் ஊடே காதல் அரும்ப செய்து சமுக பிரச்சனைகளை அலச முற்பட்டிருக்கிறார் திரைப்படத்தின் நாயகனும் இயக்குனருமான பிரகாஷ்ராஜ்.

    ‘’இந்த பொறப்பு தான் ருசிச்சு சாப்பிட கிடைச்சது ‘’என்கிற தலைப்பு பாடலுடன் தொடங்குகிறது திரைப்படம் .இளையராஜாவின் இசை ஆளுமையில் தமிழகத்தின் மிகப் பிரசித்திபெற்ற உணவுவகைகளின் காட்சிபடுத்தளில் நாவில் நீர் ஊற வைக்கிறது

காதல் தோல்விக்குப் பிறகு திருமணமே செய்யாமல் தனி மரமாகவே வாழ்ந்து வரும் நாற்பத்தைந்து வயதான தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பிரகாஷ் ராஜ், செவ்வாய் தோஷம், நாகதோஷம் போன்ற ஜாதக வில்லங்கங்களால் திருமணம் தள்ளிப்போன சினேகா ..இந்த இரண்டு உணவுப் பிரியர்களிடையே ஏற்படும் மோதலும் அதை தொடர்ந்து ஏற்படும்  நட்பும் காதலாய் மலருகிறது, சந்திக்க முடிவு எடுக்கிறார்கள்.ஆனால், தாழ்வுமனப்பான்மையால் இருவருமே தங்களுக்குப் பதில் வேறு ஒருவரை அனுப்பிவைக்க, அது உண்டாக்கும் குழப்பங்களும் தடுமாற்றங்களுமே கதை!



ஒரு பிரெஞ்சு போர் வீரனுக்காக காத்திருந்து அவன் காதலி தொடர்ந்து நான்கு நாட்கள் கேக் செய்வதும் போர் முனையில் இருந்து திரும்பிய அவனுக்கு அதை கொடுத்து தன் காதலை வெளிப்படுத்தியதை இணைத்து நாயகன் நாயகியின் காதலை வெளிப்படுத்துவது போன்ற காட்சியமைப்பும் அதற்க்கு அமைக்கப்பட்ட பின்னணி இசையும் தமிழ் திரையுலகில் ஒரு புதிய முயற்சி !

செவ்வாய் தோஷம், நாகதோஷம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு திருமண வயதைத் தாண்டிய பெண்கள் எதிர்கொள்ளும் காட்சியமைப்புகள்  சிறப்பாக படம் பிடிக்கபட்டுள்ளது  அதிலும் ஊர்வசியிடம், ‘எனக்கு கல்யாணம் ஆகவில்லை, என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?ன்னு போற வர்ற எல்லார்கிட்டேயும் கேட்கவா முடியும்னு. சொல்லி அழும் இடம் ஜாதகத்தால் சீரழிக்கப்பட்ட பெண்களின் வேதனையை வெளிப்படுத்துகிறது.

ஜக்கையா என்கிற பழங்குடி இனத்தை சார்ந்தவரை அவரது மூலிகை கண்டுபிடிப்புக்காக பன்நாட்டு கம்பனிகள் துரத்துவதும் அவர்களுக்கு உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் துணை போவதும்,அந்த ஜக்கயாவை காப்பாற்ற முனைந்து முடியாமல் நாயகன் தடுமாறுவதும் சொல்லப்படிருந்தாலும் இந்த பிரச்னையை இன்னும் ஆழமாய் சொல்லி இருக்கலாம் என்கிற ஆதங்கம் தோன்றுகிறது .

காவேரி நதி பிரச்னை அந்த நதி பொறந்ததுக்கு முன்னே இருக்கு’, ‘பூமிக்கு அடியில் நாம கண்டு எடுக்கிற கடவுள் சிலை கூட காதலிக்குது. நாமதான் கல்லா இருக்கும்  அவளை உனக்குப் பிடிச்சிருக்குங்கிற முடிவை நீ எடு. அவளுக்கு உன்னைப் பிடிக்காதுங்கிறதை அவளே எடுக்கட்டும் போன்ற  செழுமையான வசனங்களை வழங்கியிருக்கிறது  விஜி மற்றும் ஞானவேலின் கூட்டணி

 இத் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் இசைஞானி இளையராஜா தனது இசையால் ஆளுமை செய்கிறார் ,குறிப்பாக திரைப்படத்தின் இறுதிக்காட்சி வசனங்களை விட இளையராஜாவின் இசையே முக்கியத்துவம் வகிக்கிறது , இத் திரைப்படத்தில்  திரைகதை அமைப்பில் ஒரு சில குறைகள் இருந்தாலும் நல்ல தரமான படம் என்கிற வகையில் வரவேற்கலாம் !

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

திருப்பத்தூர் எடுக்கும் திருவிழா !

                                        

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அதை சுற்றியுள்ள ஜோலார்பேட்டை ,ஊத்தங்கரை ,மத்தூர் ஆகிய பகுதிகள் சுயமரியாதை இயக்க காலம் தொட்டே திராவிட இயக்க வீரர்களின் கோட்டமாய் அமைந்த பகுதிகள் ஆகும் .கடந்த சில வருடங்களாக இப் பகுதிகளில் கொண்டாடப்பட்டு வரும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பலரையும் திருப்பத்துரை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது
                        பெரியார் பிறந்த நாள்  விழாவில் சென்னை தலைநகரில் பெரியார்திடலில் ஏதாகிலும் ஒரு விழாவில் பங்கேற்கும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி இந்த ஆண்டு எப்போதும் இல்லாத முன்மாதிரியாக திருப்பத்தூரில் கலந்து கொள்கிறார் 
என்பதால்
  இந்த பெரியார் விழா கூடுதல் சிறப்புடன் கொண்டாட ஏற்பாடுகள் நடைப் பெற்று வருகின்றன .

                        



                           திருப்பத்தூர் அதை சுற்றி உள்ள 140 ஊர்களில் 4 x 3 அளவுள்ள ஒரே அளவுள்ள தந்தை பெரியார் படங்கள் ஊரின் முகப்பில் அமைக்கப் பட்டிருக்கும் .திருப்பத்தூர் நகரத்தில் இருந்து திராவிடர் கழகத் தோழர்கள் ,பெரியார் தொண்டர்கள்,பல்வேறு அரசியல் கட்சியினர் ,சமுக சேவகர்கள் நான்கு அணிகளாக பிரிந்து கொள்வர் .




                       இதில் ஒரு அணி மகளிர் அணி . மகளிர் அனைவரும்  ஒரே விதமான உடையில் திருப்பத்தூர் நகரம் முழுவதும் அமைக்கப்பட்ட 60 பெரியார் படங்களுக்கு மாலை அணிவிப்பர் .பின்னர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று நல உதவிகள் வழங்குவர் .அங்கங்கே மரம் நடுவர் .மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்குவர் .இப்படியான பணிகள் காலை 6 மணியில் இருந்து மாலை 4  மணி வரை நடைபெறும்





  மற்ற மூன்று அணிகளும் மூன்று திசைகளில்  பிரிந்து செல்லும் .ஒவ்வொரு அணியும் 20க்கும் மேற்ப்பட்ட இரு சக்கர வாகனங்கள் 10க்கும் மேற்ப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள்  கொண்டதாய் இருக்கும் .பேண்ட் வாத்தியம் கொண்ட வாகனம் எல்லா வாகனங்களுக்கும் முன் செல்லும் ஒவ்வோர் ஊரிலும் முகப்பில் வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் படத்திற்கு வாகனம் சென்ற உடன் அவ் ஊர் முக்கிய பிரமுகர் கொண்டு மாலை இடும் வைபவம் பலத்த முழக்கத்துடன் பட்டாசு சத்தம் போட்டியிட நடைபெறும் .அனைவருக்கும் இனிப்பு  வழங்கப்பட்டவுடன்  அடுத்த ஊர்க்கு வாகனம் புறப்படும் .இப்படி மூன்று திசைகளுக்கும் சென்ற வாகன அணிகள் சரியாக 4 மணிக்கு திருப்பத்தூர் நகரில் சந்திக்கும் .அங்கு பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெறும் .இதற்கிடையில் பெயர் பலகை திறப்பு ,பள்ளிகளுக்கு பெரியார் படம் அன்பளிப்பு ,கல்வெட்டு திறப்பு ,என பல்வேறு நிகழ்வுகள் இருக்கும் 
                           இந்த ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பங்கேற்பதால் ஜோலார்பேட்டையில் பெரியார் தொண்டர்கள் பங்கேற்கிற குடும்பவிருந்தும் ,பெரிய ஊர்வலமும் ,மாலையில் பெரியார் விழாவும் நடைபெற உள்ளது .இப்படி அரசியல் கட்சிகள் பேதமின்றி கிராமம் கிராமமாய் திருவிழாகணக்காய் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப் படுவது ஆச்சரியமாய் உள்ளது .
                     இதில் இன்னுமொரு சுவாரஸ்யமான தகவல் உலகத்தில் பல நாடுகளில் தமிழர்களால் பெரியார் பிறந்த நாள் கொண்டாடப் பட்டாலும் ஆப்ரிக்கா கண்டத்திற்கு பெரியாரும் போனதில்லை .
ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள தமிழர்களும் பெரியார் பிறந்த நாள் கொண்டாடியதில்லை .முதன் முறையாய் பெரியார் ஆப்ரிக்கன் பவுண்டெசன் ஆப்ரிக்காவில் பெரியார் பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாடவிருக்கிறது..அப்படி  கொண்டாட்டத்திற்கு காரணமானவர் பெரியார் ஆப்ரிக்கன் பவுண்டெசனின் தலைவர் கே.சி .எழிலரசன் தான் திருப்பத்தூர் திராவிடர் கழகத்திற்கும் மாவட்ட தலைவர் .